Wednesday, July 22, 2009

அரேபிய ராசாக்கள்

இதுதான் முதல்முறையா ...
இல்லை இதற்குமுன்
வேறுநாடு போயிருக்கியா ...
பராவாயில்லை எல்லாம் பழகிபோகும் ...
நரகவாசிகளின் ஆறுதலோடு
இனிதே துவங்கும் நரகவாழ்க்கை ..

அறைக்குள் நுழைந்தோமோ இல்லையோ
எங்கள் காலண்டர்களின் தேதிகள்
வெட்டுபட துவங்கும் ..

குளிரூட்டப்பட்ட அறையினில்
தூக்கமற்று நீளும் இரவுகள் ..

அலார கடிகாரத்தின் அச்சுறத்தலோடு
வேண்டாவெறுப்புடன் விதியேயென
விடியும் நாட்கள் ..

இரைச்சிதுண்டு தேயிலையில்
கிடந்தாலும் கிடக்ககூடும்
பார்த்து பக்குவமாய் குடிக்கணும் ..

காலவித்தியாசம், பணமதிப்பு
இன்னும் சில பல
அவசியமற்ற அத்யாவசிய கேள்விகள்...
சுக துக்க நிகழ்வுகள்
துவங்கி முடிந்துவிடும்
தொலைபேசி அழைப்புகளினூடே ..

தாமதமாய் வீடுசென்று
அப்பாவிடம் திட்டுவாங்கி
தூங்கும் இரவுகள் ..
அம்மா கொஞ்சி கெஞ்சி
விடியும் நாட்கள் ..
அக்கா குழந்தையின் புன்னகை
எதிர்வீட்டு பெண்ணுடனான ஈர்ப்பு
தெருமுக்கு டீகடை
நண்பர்களுடன் அரட்டை...............................

அடிக்கடி கனவுகள் கண்டு
கண்கள் கலங்கும்
நாடு திரும்பிவிட துடிக்கும் ..

பொருளாதாரம் பின்மண்டையில்தட்டி
ஞாபகபடுத்தும் குடும்ப வறுமையை ..

கனவுகள் கானல் நீராகி
ஒட்டகங்களின் காலடியில்
மிதிபட்டு சாகும் ..
சம்பளமும் கிடைக்கும்
சந்தோசம் விற்ற காசுகள்
சந்தோசமாய் வீடுபோய் சேரும் .

No comments: